Thursday, November 5, 2009

சாதி வெறியும் இட ஒதுக்கீடும்



மனித உயிர்த்தளிர்ப்பின் கொள்கைப்படி எவன் மிஞ்சுகிறானோ அவன் வைத்ததே சட்டம், சம்பிரதாயம். இப்படி ஜாதியே இல்லாமலிருந்த காலம்தொட்டு ஜாதிகள் பிறந்து துர்நாற்றம் அடித்துக்கொண்டிருக்கும் இந்தக் காலம்வரை எவன் மிஞ்சினானோ அவன் வைத்ததுதான் சட்டம், சம்பிரதாயம். அந்தக் காலம் தொட்டு இந்தக்காலம் வரை ஒரு குறிப்பிட்ட இனத்தார் இன்னொரு இனத்தாரை அடிமைப்படுத்தி வைத்ததில்லை, இது ஒரு சுழற்சி முறையில் மாறிக்கொண்டே வருகிறது. உச்சியில் இருப்பவன் சுமார் 10 சமூகத்தினரை ஒட்டுமொத்தமாக அடிமைப்படுத்தி மேலெழும்பினான் என்றால், மீதமுள்ள 10ல் நான்கு ஒன்றாக சேர்ந்து மேலிருப்பவனை கீழே தள்ளி, மீதமுள்ள ஆறையும் அடிமைப்படுத்துகிறது.


நாம் இப்பொழுது பேசித்திரியும் ஜாதிப் படிமங்கள் எல்லாம் நமக்கு நினைவிலிருக்கும் காலம்தொட்டுத் தெரிந்ததே. அதாவது சுமார் 500 ஆண்டுகள் வைத்துக்கொள்ளலாம். அதற்கும் முன்னர் நடந்தது எல்லாமே யாரோ ஒருவர் எழுதிய சரித்திர புத்தகத்தையும், கல்வெட்டுக்களையும் கொண்டே அறிய முடிகிறது. எழுதியவர் நேர்மையான கருத்தை பல புறம் ஆராய்ந்து எழுதினாரா என்பதும் கேள்விக்குறியே! ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை, எல்லாவற்றிற்கும் ஆதாரம் கிடைக்கின்றது. பத்திரிகை முதல் படம் வரை ஆதாரங்கள் குவிகிறது. ஆயினும் இப்பொழுதும் இது போல இட்டுகட்டிக் கதைகள் ஏராளம் குவிந்தவண்ணம்தான் இருக்கிறது.


நாம் மனிதர்கள். ஆறு அறிவு இருக்கிறது. எனது முப்பாட்டனுக்கு தீங்கு செய்தவனை நான் இன்று தண்டிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் இந்தப் பகை என் வருங்கால சந்ததியினருக்கும் நான் கொடுத்துவிட்டுப் போக வேண்டி வரும். தமிழகத்தில் இப்பொழுது பலரும் ஜாதி இழிவிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றனர். பல முன்னேறிய நகரத்தில் ஜாதிப்பாகுபாடு, இரட்டைக் குவளை முறை இருப்பதில்லை. எந்த பெரிய பெரிய நிறுவனங்களிலும் வேலை பார்ப்போரிடம் ஜாதிப் பாகுபாடு காட்டுவதில்லை, ஒன்றிரண்டில் இருக்கக்கூடும், அவைகள் ஒரு ஜாதிவெறியனால் நடத்தப்படக்கூடும்.


வீரனும், செல்வந்தனும் வைத்ததே சட்டமாகும், இது தவறென்று யாரும் கூறிவிட முடியாது! ஏனெனில் இதுதான் பரிணாமம். ஒரு ஊரில் இருக்கும் 100 பேரும் சிப்பாயாகவும், அதே சமயம் தொழிலதிபராகவும் இருக்க முடியாது. ஆக 20 பேர் சிப்பாய், 10 பேர் தொழிலதிபர், மீதமுள்ளோர் கூலி. இந்த 10 தொழிலதிபரும் சேர்ந்து தங்களையும், மீதமுள்ள கூலிகளையும் உயிரையும் காப்பாற்ற 20 சிப்பாய்களுக்கு பணம் கொடுக்கின்றனர். கூலிகளுக்கோ தினம் தினம் சோறு போடும் தொழிலதிபர் முதலாளியாகவும் அவர் மிகவும் நல்லவராக இருக்கும் பட்சத்தில் கடவுளாகவும் மாறுகிறார். இது எல்லாம் சமுதாய அமைப்பின் சாராம்சம், இதை யாரும் மாற்றவும் முடியாது மறுக்கவும் முடியாது!


இன்றைய தேவை என்ன? நான் கல்லூரியில் படித்து முடித்து கிட்டத்தட்ட 9 வருடமாக பழகிக் கொண்டிருக்கும் என் நண்பர்களது ஜாதி எனக்கு இன்று வரை தெரியாது! எங்கள் யாருக்குமே தெரியாது! இதுபோன்ற சமுதாயம் உருவாகி படர்ந்து கொண்டிருக்கிறது. நமக்குத் தேவை இப்பொழுது இதுதான். களைகள் இருந்துகொண்டேதான் இருக்கும், நாம் அதை அகற்ற வேண்டிய நேரத்தில் அகற்றிவிட வேண்டும்.


இன்றளவும் திருமணம் என்பது அவரவர் சாதிக்குள்ளேயே செய்து கொள்ளும் முறை இருப்பதால் இன்றளவும் சாதிகள் நிலை பெற்றிருக்கிறது. ஆர்க்குட் போன்ற தளங்களில் பெரும்பாலும் சாதியின் பெயரில் குழுமம் ஆரம்பித்திருப்பவர்களின் முக்கிய பேச்சுக்கள் மணப்பெண், ஆண் தேடுவதிலேயே இருக்கிறதாக படுகிறது. இதைத் தாண்டி ஒரு சிலர் அதில் தனது சாதி வெறியைத் திணித்து அந்த கூட்டத்தை திசை திருப்பப் பார்க்கின்றனர்.


இணைய நண்பர் ஒருவர் அனுப்பிய ஆர்குட் முகவரியில் சென்று பார்த்த பொழுது அது ஒரு குறிப்பிட்ட சாதி மக்களுக்காக அமைக்கப் பட்டதாக இருந்தது. அதில் இருவர் மட்டும் ஒரு சாதிவெறி கருத்தை பதித்திருந்தனர். நமது இணைய நண்பர் அந்த சாதிவெறி வாசகங்களை ஏசித் தள்ளிவிட்டு வந்திருந்தார். அத்தகு சாதி வெறி வாசகங்களை எழுதியவருக்கு ஆதரவாக அந்த சாதிக்குழுவைச் சார்ந்த வேறு யாரும் பேசவில்லை என்றே தெரிகிறது. ஆக அந்த சாதிக் குழுவில் இருக்கும் யாருமே அதை அங்கீகரிக்கவில்லை என்று தெரிகிறது அதற்கு ஒரு சபாஷ்!


சாதி அடக்குமுறைகளை எதிர்த்துப் பேசும் நண்பர்கள் சிலர் இட ஒதுக்கீட்டை ஆதரித்துப் பேசுகிறார்கள். இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. நாம் அனைவரும் உணர்ச்சியின் வேகத்தில் ஒரு சில முக்கிய காரணிகளை புறந்தள்ளிவிடுகிறோமோ என்று அஞ்சுகிறேன்.


இட ஒதுக்கீடு: உதாரணத்திற்கு என் நண்பன் ஐயர் இனத்தைச் சார்ந்தவனையும், இன்னொரு நண்பன் தாழ்த்தப்பட்ட சாதி வகுப்பில் இருப்பவனையும் எடுத்துக் கொள்வோம். (சாதியைப் பற்றி நான் தெரிந்துகொண்டதில்லை என கூறிவிட்டு இப்பொழுது எப்படி தெரியும் என்று கேள்வி எழலாம். ஐயரை அவன் வீட்டிற்கு சென்றதுமே அறிந்துகொண்டேன், மற்றொரு நண்பனை ஒரு சாதி இட ஒதுக்கீட்டில் மனு செய்யும்பொழுது அறிந்துகொண்டேன்). இந்த ஐயர் நண்பனின் முப்பாட்டனுக்கு முப்பாட்டன் வரை இதர சாதிகளை இழிவாக பார்த்தமையால், நான் அவனையோ அவன் என்னையோ இன்று ஒதுக்கவில்லை, அதே போல் மற்றொரு நண்பனும்.


பிராமண இனத்திலும் மூன்று வேளை உணவிற்கு சிரமப் படுபவர்கள் இருக்கிறார்கள், தாழ்த்தப்பட்ட சாதியிலும் இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு எப்படி இருத்தல் வேண்டும் என்று ஆராய்வோம். இட ஒதுக்கீடு முறை பனிரெண்டாம் வகுப்பு வரை முறையானது. ஏனெனில் இத்தகு ஒதுக்கீடு இல்லாவிட்டால் தாழ்த்தப்பட்ட சாதியிலிருப்பவர்கள் தத்தம் குழந்தைகளை படிக்க வைப்பதில்லை. ஆயினும் பனிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகு பொறியியல், மருத்துவம் என்று தொழில் பிரிவு பாடங்களை படிகக் வரும்பொழுது ஒதுக்கீடு மிகவும் தவறானதாகிறது. யாரும் கோபம் கொள்ள வேண்டாம், மனதை அமைதி படுத்திக் கொண்டு தொடருங்கள். ஒரு உயர் சாதி மாணவன் 80% தேர்ச்சியுற்று கட்டிட தொழிலை படிக்கிறான் என வைத்துக் கொள்வோம். மற்றொரு தாழ்த்தப்பட்ட சாதி மாணவன் 60% தேர்ச்சியுற்று அதே படிப்பை அதே கல்லூரியில் பெற்று விடுகிறான் என வைத்துக்கொள்வோம். இருவரின் அறிவுக் கூர்மையே இங்கே வித்தியாசப்படுகிறது. ஒருவன் பாடங்களை உண்ணிப்பாக கவனித்து சரியான முறையில் கட்டிடம் கட்டுவான். மற்றொருவனோ அந்த அளவுக்கு கூர்மையில்லாததால் தன்னாலியன்றவரையில் பாடத்தை கவனித்து ஒருமாதிரியாக ஒரு கட்டிடம் கட்டுவான். இப்பொழுத் எந்தக் கட்டிடம் உறுதியாக இருக்கும்? அதில் சரிவர கட்டப்படாத ஒரு கட்டிடம் இடிந்து விழும் பட்சத்தில் அதில் எத்தனை சாதி மக்களின் உயிர் போகும்?


இப்பொழுது இதே முறையை மருத்துவத்தில் புகுத்துங்கள். உயிர்களோடு விளையாடுவது தொழில். அங்கே கல்வியில் தேர்ச்சித் தகுதி இருப்பவருக்கு மட்டுமே பதவிகள் வழங்கப்பட வேண்டும். இல்லையேல் அது நம் நாட்டின் பொருளின் தரத்தையே குறைத்துவிடும். பலருக்கும் ஒதுக்கீடு என்பது சரிவர புரிவதில்லை. ஒரு நிர்வாகத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு 10% ஒதுக்கீடு என்றால், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 100 பேரில் 10 பேர் மட்டுமே அதிகபட்சம் பணிபுரிய முடியுமென்பதல்ல. குறைந்த பட்சம் 10 என்பதே இங்கு நாம் அறிந்துகொள்ள வேண்டியது. அதாவது 10 பேர் குறைந்தபட்சம் அவர்கள் இருத்தல் வேண்டும், மேற்கொண்டு 90 பேரில் எத்தனை சாதியினரும் இருக்கலாம், ஏன் அதிலும் தாழ்த்தப்பட்டோர் இருக்கலாம்!!!


இப்பொழுது முக்கியமான அவசியமான மாற்றம் என்னவென்று பார்ப்போம். ஒரு உயர்சாதி மாணவனை விட தாழ்த்தப்பட்ட சாதி மாணவன் மதிப்பெண் குறையாயிருந்தாலும் ஒரே நிர்வாகத்தில் ஒரே படிப்பை படிக்க முடியும் என்பது இப்போதைய விதி! முதலில் எப்படி இந்த மாறுபாடு தேர்ச்சியில் வருகிறது? இதை மட்டுமே அரசாங்கம் சரி செய்ய முன்வர வேண்டும்.12ம் வகுப்பு வரை தாழ்த்தப்பட்ட சாதி மாணவனுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்க முடியுமோ அத்தனையும் செய்து கொடுத்து உயர்சாதி மாணவனின் தகுதியை இவனை எட்ட வைத்தல் வேண்டும். ஆக மொத்தம் சாதியின் பெயரில் பாகு பாடு 12 வரை தற்சமயம் இருக்கலாம்.


12ம் வகுப்பிற்குப் பிறகு தொழிற்கல்வியிலோ அல்லது தொழிலிலோ ஒதுக்கீடு என்பது பொருளாதார அடிப்படையிலேதான் இருத்தல் வேண்டும். எனக்குத் தெரிந்து சகல ஜாதிகளிலும் பெரும்பணக்காரர்களும், நடுத்தர மக்களும், கஞ்சிக்கே வழியில்லாதவர்களும் இருக்கிறார்கள். யாரும் தமிழ்கத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினர் அனைவரும் கஞ்சிக்கே வழியில்லாதவர்கள், ஒதுக்கீடு இல்லையென்றால் அவர்களெல்லாம் மேற்படிப்பிற்குச் செல்லாமல் கூலி வேலைக்குச் சென்று விடுவர் என்று ஒரேடியாக சொல்லிவிட முடியாது! தாழ்த்தப்பட்ட சாதியிலும் பெரும் பணக்காரர்களும், நடுத்தர வர்க்கமும் இருக்கத்தான் செய்கிறது. ஆக என் கேள்வி ஏன் சலுகை தேவையில்லாதவர்களுக்கு சலுகைகள் கொடுக்கப் படவேண்டும் என்பதே!


ஒதுக்கீட்டை 12ம் வகுப்பிற்குப் பிறகு பொருளாதார அடிப்படையிலேயே நிறுவ வேண்டும். ஆனால் மதிப்பெண்ணில் பாகுபாடு கிடையாது. தகுந்த மதிப்பெண் இருந்தால் மட்டுமே மேலே செல்ல அனுமதி, தகுந்த மதிப்பெண் இருந்தும் பண வசதி இல்லாதோருக்கு ஒதுக்கீடு அளியுங்கள், அதை விடுத்துவிட்டு கராறாக இன்ன சாதியினரென்றாலே ஒதுக்கீடு என்பது முறைகேடு, அது நம் சமுதாயத்தில் சாதிப்பாகுபாடுகளை தூண்டுவதாகவே அமையும். இத்தகு கொள்கைகளோடு நம்மால் சாதிப்பாகுபாடுகளை நிறுத்த முடியாது! பட்டப்படிப்பு படித்த இளைஞர்களும் இன்று சாதிக் குழுமம் இது போன்று ஆர்க்குட்டில் ஆரம்பிக்கிறார்கள் என்றால் அது யார் தவறு? சாதி இட ஒதுக்கீட்டை உயர்படிப்பு, பணியிடம் என்று எல்லா இடங்களிலும் பிரித்து வைத்ததுதான்! ஒருவர் வாழ்வு முழுவதும் சாதி அடையாளம் கொடுத்து கொடுத்து இன்னமும் தமிழகத்தை சாதிப் பாகுபாடுள்ள நிலமாக மாற்றி வைத்திருக்கிறோம்.


மக்களும் அரசும் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.


13 comments:

Ashok D said...

கனமான விஷயத்தை நன்றாக அனுகியிருக்கிறீர்கள்.

சிறு சறுக்கல் இருப்பினும் பதிவு நன்று. வாழ்த்துக்கள்.

Srig said...

அடிப்படை கல்வியில் சமசீர் நிலை ஏற்பட்டு விட்டால் அனைவரும் ஒரே மாதிரியான கல்வி தகுதியை பெற்று விடலாம் என்பது என் கருத்து. அதன் பிறகு இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் அமைவது பிரச்சனை ஆக இருக்காது. ஆனால் அது வரை , சிறப்பான கல்வி வாய்ப்புகளை அனைவரும் பெரும் வரை ஒதுக்கீடு தேவை படும் என்றே தோன்றுகிறது.

மணி said...

//நாம் மனிதர்கள். ஆறு அறிவு இருக்கிறது. எனது முப்பாட்டனுக்கு தீங்கு செய்தவனை நான் இன்று தண்டிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் இந்தப் பகை என் வருங்கால சந்ததியினருக்கும் நான் கொடுத்துவிட்டுப் போக வேண்டி வரும்//

உங்க முப்பாட்டன் வாங்கிய சொத்தையும் வேண்டாம் என்று சொல்லி விடுவீர்களா....

அல்லது உங்களிடம் கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் அவரது மகனிடம் அதனை கேட்க மாட்டீர்களா

ஒளியவன் said...

பின்னூட்டமிட்ட அன்பர்களுக்கு நன்றி.

@தளபதி: நீங்கள் பகையையும் கொலையுணர்ச்சியையும் உங்களது குழந்தைக்கு விட்டுக் கொடுக்கப் போகிறீர்களா அல்லது அன்பையும் செல்வத்தையும் விட்டுக் கொடுக்கப் போகிறீர்களா என்பதைப் பொறுத்தே என் பதில் அமையும்.

சமநிலை தவறிய ஒரு நிலையை சமநிலை செய்ய விழைகிறேன், நீங்கள் மறுபுறம் தாழ்த்த வேண்டும் என எண்ணுகிறீர்கள். உங்கள் மனம் போல நடக்கும்.

ஒளியவன் said...

@தளபதி: உங்களது ப்ளாகருக்கு இப்பொழுது வந்தேன்.
//
மார்க்சிய லெனினிய வழிமுறையில் சமூக மாற்றத்திற்காகப் போராடும் பலரில் ஒரு எளிய தோழன். வயிறு வளர்க்க ஒரு ITES நிறுவனத்தில் வேலை. பிறந்தது பழைய நெல்லை மாவட்டம்.
//

சமநிலையை பரப்ப எண்ணிய கொள்கைவாதிகளின் பின்னால் துணையாய் இருப்பவர் போல தோன்றுகிறீர்களே! பின்னர் ஏன் மனிதம் மறந்து போனீர்கள்? அன்பு ஒன்றில்லாமல், அஹிம்சை ஒன்றில்லாமல் இன்பம் ஏது?

Srig said...

ஆக தளபதி , உங்கள் மகன் ஒரு மனிதனாக இருப்பதாய் விட கொலைகாரனாக இருப்பதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்றே தோன்றுகிறது

சாலிசம்பர் said...

http://dharumi.blogspot.com/2006/08/168.html
இந்தப் பதிவை வாசித்துப் பாருங்கள்.

ஒளியவன் said...

வாசித்தாயிற்று அன்பரே. கட்டுரை நெடுக்க கடந்தகாலமும் நிகழ்காலமும் கலந்து கலவையாக இருப்பதால் எளிதில் தான் சொல்லவந்ததை அனைவரையும் கவரும் முறையில் எழுதுவது சாத்தியமாகிவிடுகிறது. பழையவற்றை பேசும்பொழுது பட்ட துயரங்களையும், புதியவற்றை பேசும் பொழுது அடைந்த உயரங்களையும் கூறியிருக்கும் பாங்கு மிகவும் பொருந்துகிறது. ஆயினும் இன்றைய தேதியில் சரிக்கு சமமாக மேல் சாதிக்கு இணையாக இதர சாதிகளும் இருக்கின்றனர் எனக் குறிப்பிட்டவர் பின்னரும் ஏன் இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என எண்ணுகிறார்?

ஒரு காலகட்டத்தில் நம்மை அடிமைப் படுத்தி மட்டம் தட்டியதால், பதிலுக்கு நாம் அவர்களை மட்டம் தட்டி பள்ளத்தில் வீழ்த்துவதுதான் குறிக்கோளா? ஒரு இடத்தில் ஒரு கேள்வி எழுப்புகிறார் கல்லூரிகள் அரசிடம் சென்று ஒரு மாணவன் பாஸ்மார்க் எடுத்தாலே நாங்கள் சேர்த்துக்கொள்ள அனுமதித்ததை மேற்கோளாக காட்டுகிறார். அந்த முதலாளித்துவ தவறை முன்னுதாரணமாகக் காட்டி சாதிப்படி இடஒதுக்கீடு முறை என்பதை எத்தனை தவறான முன்னுதாரணம்?

சாதிப்பாகுபாடே இல்லையென்றால் பூனை கண்ணை மூடிக்கொள்வது போல என ஒவ்வொருவரும் எண்ணிக்கொண்டால் எப்பொழுதுதான் சாதி ஒழிவது?

எனக்குத் தெரிந்த ஒரு மேல்சாதி மாணவன் நிறைய மதிப்பெண் பெற்றும் பெற முடியாத ஒரு கல்லூரியின் இடத்தை இன்னொரு தாழ்த்தப்பட்ட மாணவன் மிகக் குறைவான மதிப்பெண்ணில் பெற்றுவிட்டான். இருவர் வீட்டாரின் தராதரமும் எந்த அளவிற்கும் குறைந்ததில்லை, சொல்லப் போனால் மேல்சாதிக்காரன் என நான் குறிப்பிட்டவரின் குடும்ப நிலைதான் சற்று கவலைக்கிடமாக இருந்தது.

இரண்டு வருடம் முட்டிப் போராடி படித்து முடித்து அதிக மதிப்பெண்கள் வாங்கிய பின்னரும் அவன் ஈட்டியது என்ன? தோற்றது யாரிடம்? இந்த சமயத்தில் சாதியை அந்த மாணாக்கன் மனதிற்குள் விதைப்பது யார்? இந்த அரசும் இட ஒதுக்கீடு முறையும்தானே?! ஒரு காலத்தில் குறிப்பிட்ட மக்கள் ஒடுக்கப்பட்ட காரணத்திற்காக இன்னும் எத்தனையாண்டுகள் சாதியைக் கட்டிக் கொண்டு அழப்போகிறீர்கள்?

ஒரு சமநிலையற்ற சமுதாயத்திலிருந்து சமநிலையான சமுதாயத்திற்கு நாம் குடிபெயர்ந்தாயிற்று. இட ஒதுக்கீட்டு முறை ஆரம்பத்திலிருந்தே தவறென நான் எங்கும் கூறவில்லை, மாறாக இனியும் அது நமக்குத் தேவையில்லை எனவே குறிப்பிடுகிறேன். காலத்தால் நம்மை நாமே பின் தள்ளிக்கொள்ள வேண்டாம் என்று தான் கருதுகிறேன்.

ஒவ்வொரு மாணவனும் சாதி மறந்து 11ம் வகுப்பு வரை படிக்கிறான் இன்றைய தேதியில். திடீரென பனிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு முடிந்ததும் வலிய சென்று அவன் மனதில் சாதியை விதைத்து ஒரு விதமான காழ்ப்புணர்ச்சியை உண்டாக்கி மனோரீதியாக அவனை அந்த சாதி பாதிக்கிறது. எனக்குத் தெரிந்த அந்த மாணவன் கூறுகிறான் “நீங்க விளையாடப் போங்கடா, நான் வரலை, நீங்க கம்மியா மார்க் எடுத்தாலும் உங்களுக்கு சீட் கிடைச்சிடும், நான் அதிகமா எடுத்தாலும் கிடைக்காதுடா, வீட்டுல பேமெண்ட் சீட்ல படிக்க வைக்க மாட்டாங்கடா”...

நாம் மனிதர்களாக மாறிப்பழக வேண்டும். இனியும் சாதியைக் கட்டிக் கொண்டு அழுவதை விட, இந்த இட ஒதுக்கீட்டை ஞாயப்படுத்திப் பேச முனைவதை விட, சாதியைக் களைவதற்கு சிந்திக்கவாவது தொடங்குங்கள் என்றே கூறுகிறோம்.

I'm Gopal said...

வணக்கம் பாஸ்கர்,
உனது(வலை பூவின் ஆசிரியர் எனது கல்லுரி தோழன் என்றதால் வந்த உரிமை ) இந்த புதிய முயற்ச்சிக்கு பாராட்டுகள்.
மத மற்றும் சாதி அடிப்படைகள் தீர வேண்டும் என்ற உனது ஆதங்கம் உன்னை போலவே எனக்கும் என்னை போலவே நமது தலைமுறையில் பலருக்கும் உள்ள கனவே...
கனவு மெய்படவேண்டும்...

அதற்காக நீ கொடுக்கும் விளக்கம்களும் தீர்வுகளும் இன்றைக்கு இருக்கும் நாற்பது(?) அல்லது அரசாங்க கோப்புகளின் படி நான்கு
சாதிகள் போய் மேலும் வேறு நான்கு அல்லது நாற்பது சாதிகள் தோன்றவே வழி வகுக்கும்..

ஒளியவன் said...

வருக கோபால். உரிமை உனக்கு தாராளமாய் இருக்கிறது. இப்பொழுதே பல ஊர்களில் பேரூராட்சி அந்தஸ்து இருந்தும் அதைப் பெற்றுக் கொள்ளாமல் ஊராட்சிக்கு மாறுகின்றனர், காரணம் சலுகைகள், அதே போல ஒரு சில பணக்காரர்களும் நாங்கள் ஏழை என்று மனு செய்யலாம். ஆனால் இதற்கும் அரசாங்கத்தில் என்ன மாற்றம் வந்தால் சரியாகும் என வழி வைத்திருக்கிறேன், பின்வரும் கட்டுரைகளில் பதிகிறேன். தொடர்ந்து வாசித்தும் கருத்தும் இட்டுவா. அல்லது உனது ப்ளாகரில் சமாதானத்துடன் சமத்துவம் நிலவ வகை செய்யும் கட்டுரைகளை எழுது. இன்னும் ஏராளமானோர் பயன் பெறுவர்.

இரசிகை said...

m....ok.

ஒளியவன் said...

நன்றி இரசிகை.

பவள சங்கரி said...

சபாஷ்.......... சமத்துவம் மலர வேண்டும்.
//பிராமண இனத்திலும் மூன்று வேளை உணவிற்கு சிரமப் படுபவர்கள் இருக்கிறார்கள், தாழ்த்தப்பட்ட சாதியிலும் இருக்கிறார்கள்// சத்தியமான ஆய்வு..

அருமை. ஓங்குக உங்கள் சிந்தை! தொடரட்டும் தங்கள் பயணம். வாழ்த்துகள்.

தங்களுடைய நற்சிந்தைகள் வளர்ந்து வளம் பெற வாழ்த்துகள்.

Post a Comment