Wednesday, October 28, 2009

நாட்டு நடப்பு


அரசியலையும், அரசாங்கத்தையும் பற்றி நாம் பேசாமலிருந்த காலமேயில்லை. ஒவ்வொரு முறையும் இவையிரண்டும் விமர்சனத்திற்குள்ளாகிக் கொண்டே இருக்கிறது. ஒரு பொதுவான விசயத்தை விமர்சிக்கும் பொழுது அதற்கான எதிர்கருத்துக்கள் இருந்து கொண்டே இருக்கும், ஏனெனில் அரசு, அரசியல் நடவடிக்கைகள் பல முகங்கள் கொண்டவை. மேலும் மக்களின் எண்ணங்களோ ஒரு சமயம் அதற்கு இது பரவாயில்லை, அதனால் இதை அங்கீகரிக்கலாம் என்றும், எதுவுமே சரியில்லை நாம் எதையுமே ஆதரிக்கக் கூடாது என்றும் இருக்கிறது, ஆகையால் வெவ்வேறு கருத்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. நான் எந்த மதம் சார்ந்தோ, சாதி சார்ந்தோ, மாநிலம் சார்ந்தோ இங்கே கட்டுரைகள் எழுதப் போவதில்லை. ஆயினும் ஒரு நேரத்தில் ஒரு மதத்தைப் பற்றிய வரி வரலாம், அது நான் பிறந்த மதமாகவும் இருக்கலாம், மாற்று மதமாகவும் இருக்கலாம், ஆயினும் என் நோக்கம் எந்த மதத்தையும் கேலி செய்வதல்ல.

பல மக்களுக்கு கிடைக்காத கல்வியறிவும், பல விசயங்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிற வாய்ப்பும் அமைந்த நம்மைப் போன்ற சிலர் தாமே முன்வந்து நமது கனவு இந்தியாவிற்கான சாலைகளுக்கான வேலையைத் தொடர வேண்டும். இங்கே இடப்படும் கட்டுரைகளுக்கு எதிராக கற்கள் குவியுமென்பதும் நானறிந்ததே! அந்த கற்கள் அனைத்தும் கனவு இந்தியாவின் கோட்டைகளிலேயே பதிக்கப்படும், அதனால் எண்ணற்ற கற்களை எறியுங்கள்.

நல்லதொரு கல்வி கற்று, நல்லதொரு வேலையில் மகிழ்ச்சியாகவே இருக்கும் ஒருவனுக்கு இது போன்ற வேலை தேவைதானா? இது போன்று பொதுவிடத்தில் கட்டுரையிடுவதால் பலரின் கேள்விகளுக்கும், கேலிகளுக்கும், சுடுசொற்களுக்கும், மிரட்டலுக்கும் ஆளாக நேரிடுமே என்ற அச்சம் எனக்குள் வந்தது உண்மைதான். ஆயினும் வாய்கிழிய வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அருகிலிருக்கும் ஒருவரிடமோ அல்லது இருவரிடமோ இந்தியாவின் நிலை இப்படி இருக்கிறதே இதெல்லாம் எங்கே மாறப்போகிறது என்றும், இதை இப்படிச் செய்தால் மாறுமென்றும் கூறிவருகிறோமே, ஒருபொழுதாவது இந்தக் கருத்துக்களை பொதுமக்களின் கண்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறோமா என்று எண்ணினேன்... பின்னர் ஒருமனதாக இயன்றவரை எனது சிறு எண்ணங்களில் தோன்றி மறையும் கேள்விகளையும் விடைகளையும் உங்களுக்கு வழங்க உறுதியெடுத்துள்ளேன்.

இங்கே இடப்படும் கட்டுரைகள் பெரும்பாலும் தரமான இந்தியாவை உருவாக்குவது எப்படி என்பது பற்றியும், தரமற்ற அரசியல் போக்கை சுட்டிக் காட்டுவதாகவும், பெண்ணுரிமையின் அவசியத்தை வெளிக்காட்டவும், உள்ளூர் பிரச்சினைகள் சிலவற்றை அலசுவதற்காகவுமே இருக்கும். இங்கே இடப்படும் கட்டுரைகள் எந்த ஒரு குறிப்பிட்ட மனிதரையோ, இனத்தையோ இழிவுபடுத்தும் நோக்கத்துடனோ அல்லது எண்ணத்துடனோ எழுதப்படுவது அல்ல.

இங்கே இருக்கும் யாவரும் ஊழலற்ற, உலக தேசங்களிலிருந்து பாதுகாப்பான, அன்றாட வாழ்க்கையின் தரத்தை உயர்த்துவதுமான இந்தியாவைக் காண விருப்பமுள்ளவர்களே, ஆயினும் அந்த இலக்கை நோக்கிய பாதைகள் எண்ணற்றவை, அதற்கு நாம் சொல்லும் அறிவுரைகளும், ஏற்புரைகளும் வித்தியாசமானவை, அதனால் மட்டுமே இக்கட்டுரைகளினால் சிலருக்கு மனக்கசப்பு உண்டாகுமே ஒழிய ஒற்றை இலக்கில் நமக்குள் பூசல் இல்லை.

இக்கட்டுரைகளிலிருந்து நான் முழுதாக மாறுபடுகிறேன், இது ஒரு அர்த்தமற்ற பேத்தல், இந்தக் கட்டுரைகளின் வழி பயணித்தால் நிச்சயம் இலக்கை எட்ட முடியாது என்று எண்ணிணீர்களானால் அதில் நான் மகிழ்ச்சியடைவேன். தாமதிக்காமல் உடனே உங்களுடைய எண்ணங்களை ஒரு கட்டுரையாக்கி அதில் இக்கட்டுரையை தாக்கி மட்டுமே எழுதாமல் இலக்கை நோக்கி விரையும் உங்கள் உயர்வான எண்ணங்களை பதிந்து வெளியிடுங்கள், நம் இணையமெங்கும் இலக்கை நோக்கிய கட்டுரைத் தளங்கள் குவியட்டும், ஒன்றல்லாவிடிலும் மற்றொன்றையாவது மக்கள் சுவைத்து வாசித்து பயன்பெறட்டும். அதனால் வெறுமனே விமர்சனக் கற்களை வீசிவிட்டு மறைந்துவிடாதீர்கள், கூட சில கற்களை வைத்து நீங்கள் ஒரு கோட்டை கட்டுங்கள்!

எழுமின், விழிமின், கருதிய கருமம் கைகூடும் வரை நில்லாது செல்மின்!