Thursday, November 5, 2009

சாதி வெறியும் இட ஒதுக்கீடும்



மனித உயிர்த்தளிர்ப்பின் கொள்கைப்படி எவன் மிஞ்சுகிறானோ அவன் வைத்ததே சட்டம், சம்பிரதாயம். இப்படி ஜாதியே இல்லாமலிருந்த காலம்தொட்டு ஜாதிகள் பிறந்து துர்நாற்றம் அடித்துக்கொண்டிருக்கும் இந்தக் காலம்வரை எவன் மிஞ்சினானோ அவன் வைத்ததுதான் சட்டம், சம்பிரதாயம். அந்தக் காலம் தொட்டு இந்தக்காலம் வரை ஒரு குறிப்பிட்ட இனத்தார் இன்னொரு இனத்தாரை அடிமைப்படுத்தி வைத்ததில்லை, இது ஒரு சுழற்சி முறையில் மாறிக்கொண்டே வருகிறது. உச்சியில் இருப்பவன் சுமார் 10 சமூகத்தினரை ஒட்டுமொத்தமாக அடிமைப்படுத்தி மேலெழும்பினான் என்றால், மீதமுள்ள 10ல் நான்கு ஒன்றாக சேர்ந்து மேலிருப்பவனை கீழே தள்ளி, மீதமுள்ள ஆறையும் அடிமைப்படுத்துகிறது.


நாம் இப்பொழுது பேசித்திரியும் ஜாதிப் படிமங்கள் எல்லாம் நமக்கு நினைவிலிருக்கும் காலம்தொட்டுத் தெரிந்ததே. அதாவது சுமார் 500 ஆண்டுகள் வைத்துக்கொள்ளலாம். அதற்கும் முன்னர் நடந்தது எல்லாமே யாரோ ஒருவர் எழுதிய சரித்திர புத்தகத்தையும், கல்வெட்டுக்களையும் கொண்டே அறிய முடிகிறது. எழுதியவர் நேர்மையான கருத்தை பல புறம் ஆராய்ந்து எழுதினாரா என்பதும் கேள்விக்குறியே! ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை, எல்லாவற்றிற்கும் ஆதாரம் கிடைக்கின்றது. பத்திரிகை முதல் படம் வரை ஆதாரங்கள் குவிகிறது. ஆயினும் இப்பொழுதும் இது போல இட்டுகட்டிக் கதைகள் ஏராளம் குவிந்தவண்ணம்தான் இருக்கிறது.


நாம் மனிதர்கள். ஆறு அறிவு இருக்கிறது. எனது முப்பாட்டனுக்கு தீங்கு செய்தவனை நான் இன்று தண்டிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் இந்தப் பகை என் வருங்கால சந்ததியினருக்கும் நான் கொடுத்துவிட்டுப் போக வேண்டி வரும். தமிழகத்தில் இப்பொழுது பலரும் ஜாதி இழிவிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றனர். பல முன்னேறிய நகரத்தில் ஜாதிப்பாகுபாடு, இரட்டைக் குவளை முறை இருப்பதில்லை. எந்த பெரிய பெரிய நிறுவனங்களிலும் வேலை பார்ப்போரிடம் ஜாதிப் பாகுபாடு காட்டுவதில்லை, ஒன்றிரண்டில் இருக்கக்கூடும், அவைகள் ஒரு ஜாதிவெறியனால் நடத்தப்படக்கூடும்.


வீரனும், செல்வந்தனும் வைத்ததே சட்டமாகும், இது தவறென்று யாரும் கூறிவிட முடியாது! ஏனெனில் இதுதான் பரிணாமம். ஒரு ஊரில் இருக்கும் 100 பேரும் சிப்பாயாகவும், அதே சமயம் தொழிலதிபராகவும் இருக்க முடியாது. ஆக 20 பேர் சிப்பாய், 10 பேர் தொழிலதிபர், மீதமுள்ளோர் கூலி. இந்த 10 தொழிலதிபரும் சேர்ந்து தங்களையும், மீதமுள்ள கூலிகளையும் உயிரையும் காப்பாற்ற 20 சிப்பாய்களுக்கு பணம் கொடுக்கின்றனர். கூலிகளுக்கோ தினம் தினம் சோறு போடும் தொழிலதிபர் முதலாளியாகவும் அவர் மிகவும் நல்லவராக இருக்கும் பட்சத்தில் கடவுளாகவும் மாறுகிறார். இது எல்லாம் சமுதாய அமைப்பின் சாராம்சம், இதை யாரும் மாற்றவும் முடியாது மறுக்கவும் முடியாது!


இன்றைய தேவை என்ன? நான் கல்லூரியில் படித்து முடித்து கிட்டத்தட்ட 9 வருடமாக பழகிக் கொண்டிருக்கும் என் நண்பர்களது ஜாதி எனக்கு இன்று வரை தெரியாது! எங்கள் யாருக்குமே தெரியாது! இதுபோன்ற சமுதாயம் உருவாகி படர்ந்து கொண்டிருக்கிறது. நமக்குத் தேவை இப்பொழுது இதுதான். களைகள் இருந்துகொண்டேதான் இருக்கும், நாம் அதை அகற்ற வேண்டிய நேரத்தில் அகற்றிவிட வேண்டும்.


இன்றளவும் திருமணம் என்பது அவரவர் சாதிக்குள்ளேயே செய்து கொள்ளும் முறை இருப்பதால் இன்றளவும் சாதிகள் நிலை பெற்றிருக்கிறது. ஆர்க்குட் போன்ற தளங்களில் பெரும்பாலும் சாதியின் பெயரில் குழுமம் ஆரம்பித்திருப்பவர்களின் முக்கிய பேச்சுக்கள் மணப்பெண், ஆண் தேடுவதிலேயே இருக்கிறதாக படுகிறது. இதைத் தாண்டி ஒரு சிலர் அதில் தனது சாதி வெறியைத் திணித்து அந்த கூட்டத்தை திசை திருப்பப் பார்க்கின்றனர்.


இணைய நண்பர் ஒருவர் அனுப்பிய ஆர்குட் முகவரியில் சென்று பார்த்த பொழுது அது ஒரு குறிப்பிட்ட சாதி மக்களுக்காக அமைக்கப் பட்டதாக இருந்தது. அதில் இருவர் மட்டும் ஒரு சாதிவெறி கருத்தை பதித்திருந்தனர். நமது இணைய நண்பர் அந்த சாதிவெறி வாசகங்களை ஏசித் தள்ளிவிட்டு வந்திருந்தார். அத்தகு சாதி வெறி வாசகங்களை எழுதியவருக்கு ஆதரவாக அந்த சாதிக்குழுவைச் சார்ந்த வேறு யாரும் பேசவில்லை என்றே தெரிகிறது. ஆக அந்த சாதிக் குழுவில் இருக்கும் யாருமே அதை அங்கீகரிக்கவில்லை என்று தெரிகிறது அதற்கு ஒரு சபாஷ்!


சாதி அடக்குமுறைகளை எதிர்த்துப் பேசும் நண்பர்கள் சிலர் இட ஒதுக்கீட்டை ஆதரித்துப் பேசுகிறார்கள். இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. நாம் அனைவரும் உணர்ச்சியின் வேகத்தில் ஒரு சில முக்கிய காரணிகளை புறந்தள்ளிவிடுகிறோமோ என்று அஞ்சுகிறேன்.


இட ஒதுக்கீடு: உதாரணத்திற்கு என் நண்பன் ஐயர் இனத்தைச் சார்ந்தவனையும், இன்னொரு நண்பன் தாழ்த்தப்பட்ட சாதி வகுப்பில் இருப்பவனையும் எடுத்துக் கொள்வோம். (சாதியைப் பற்றி நான் தெரிந்துகொண்டதில்லை என கூறிவிட்டு இப்பொழுது எப்படி தெரியும் என்று கேள்வி எழலாம். ஐயரை அவன் வீட்டிற்கு சென்றதுமே அறிந்துகொண்டேன், மற்றொரு நண்பனை ஒரு சாதி இட ஒதுக்கீட்டில் மனு செய்யும்பொழுது அறிந்துகொண்டேன்). இந்த ஐயர் நண்பனின் முப்பாட்டனுக்கு முப்பாட்டன் வரை இதர சாதிகளை இழிவாக பார்த்தமையால், நான் அவனையோ அவன் என்னையோ இன்று ஒதுக்கவில்லை, அதே போல் மற்றொரு நண்பனும்.


பிராமண இனத்திலும் மூன்று வேளை உணவிற்கு சிரமப் படுபவர்கள் இருக்கிறார்கள், தாழ்த்தப்பட்ட சாதியிலும் இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு எப்படி இருத்தல் வேண்டும் என்று ஆராய்வோம். இட ஒதுக்கீடு முறை பனிரெண்டாம் வகுப்பு வரை முறையானது. ஏனெனில் இத்தகு ஒதுக்கீடு இல்லாவிட்டால் தாழ்த்தப்பட்ட சாதியிலிருப்பவர்கள் தத்தம் குழந்தைகளை படிக்க வைப்பதில்லை. ஆயினும் பனிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகு பொறியியல், மருத்துவம் என்று தொழில் பிரிவு பாடங்களை படிகக் வரும்பொழுது ஒதுக்கீடு மிகவும் தவறானதாகிறது. யாரும் கோபம் கொள்ள வேண்டாம், மனதை அமைதி படுத்திக் கொண்டு தொடருங்கள். ஒரு உயர் சாதி மாணவன் 80% தேர்ச்சியுற்று கட்டிட தொழிலை படிக்கிறான் என வைத்துக் கொள்வோம். மற்றொரு தாழ்த்தப்பட்ட சாதி மாணவன் 60% தேர்ச்சியுற்று அதே படிப்பை அதே கல்லூரியில் பெற்று விடுகிறான் என வைத்துக்கொள்வோம். இருவரின் அறிவுக் கூர்மையே இங்கே வித்தியாசப்படுகிறது. ஒருவன் பாடங்களை உண்ணிப்பாக கவனித்து சரியான முறையில் கட்டிடம் கட்டுவான். மற்றொருவனோ அந்த அளவுக்கு கூர்மையில்லாததால் தன்னாலியன்றவரையில் பாடத்தை கவனித்து ஒருமாதிரியாக ஒரு கட்டிடம் கட்டுவான். இப்பொழுத் எந்தக் கட்டிடம் உறுதியாக இருக்கும்? அதில் சரிவர கட்டப்படாத ஒரு கட்டிடம் இடிந்து விழும் பட்சத்தில் அதில் எத்தனை சாதி மக்களின் உயிர் போகும்?


இப்பொழுது இதே முறையை மருத்துவத்தில் புகுத்துங்கள். உயிர்களோடு விளையாடுவது தொழில். அங்கே கல்வியில் தேர்ச்சித் தகுதி இருப்பவருக்கு மட்டுமே பதவிகள் வழங்கப்பட வேண்டும். இல்லையேல் அது நம் நாட்டின் பொருளின் தரத்தையே குறைத்துவிடும். பலருக்கும் ஒதுக்கீடு என்பது சரிவர புரிவதில்லை. ஒரு நிர்வாகத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு 10% ஒதுக்கீடு என்றால், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 100 பேரில் 10 பேர் மட்டுமே அதிகபட்சம் பணிபுரிய முடியுமென்பதல்ல. குறைந்த பட்சம் 10 என்பதே இங்கு நாம் அறிந்துகொள்ள வேண்டியது. அதாவது 10 பேர் குறைந்தபட்சம் அவர்கள் இருத்தல் வேண்டும், மேற்கொண்டு 90 பேரில் எத்தனை சாதியினரும் இருக்கலாம், ஏன் அதிலும் தாழ்த்தப்பட்டோர் இருக்கலாம்!!!


இப்பொழுது முக்கியமான அவசியமான மாற்றம் என்னவென்று பார்ப்போம். ஒரு உயர்சாதி மாணவனை விட தாழ்த்தப்பட்ட சாதி மாணவன் மதிப்பெண் குறையாயிருந்தாலும் ஒரே நிர்வாகத்தில் ஒரே படிப்பை படிக்க முடியும் என்பது இப்போதைய விதி! முதலில் எப்படி இந்த மாறுபாடு தேர்ச்சியில் வருகிறது? இதை மட்டுமே அரசாங்கம் சரி செய்ய முன்வர வேண்டும்.12ம் வகுப்பு வரை தாழ்த்தப்பட்ட சாதி மாணவனுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்க முடியுமோ அத்தனையும் செய்து கொடுத்து உயர்சாதி மாணவனின் தகுதியை இவனை எட்ட வைத்தல் வேண்டும். ஆக மொத்தம் சாதியின் பெயரில் பாகு பாடு 12 வரை தற்சமயம் இருக்கலாம்.


12ம் வகுப்பிற்குப் பிறகு தொழிற்கல்வியிலோ அல்லது தொழிலிலோ ஒதுக்கீடு என்பது பொருளாதார அடிப்படையிலேதான் இருத்தல் வேண்டும். எனக்குத் தெரிந்து சகல ஜாதிகளிலும் பெரும்பணக்காரர்களும், நடுத்தர மக்களும், கஞ்சிக்கே வழியில்லாதவர்களும் இருக்கிறார்கள். யாரும் தமிழ்கத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினர் அனைவரும் கஞ்சிக்கே வழியில்லாதவர்கள், ஒதுக்கீடு இல்லையென்றால் அவர்களெல்லாம் மேற்படிப்பிற்குச் செல்லாமல் கூலி வேலைக்குச் சென்று விடுவர் என்று ஒரேடியாக சொல்லிவிட முடியாது! தாழ்த்தப்பட்ட சாதியிலும் பெரும் பணக்காரர்களும், நடுத்தர வர்க்கமும் இருக்கத்தான் செய்கிறது. ஆக என் கேள்வி ஏன் சலுகை தேவையில்லாதவர்களுக்கு சலுகைகள் கொடுக்கப் படவேண்டும் என்பதே!


ஒதுக்கீட்டை 12ம் வகுப்பிற்குப் பிறகு பொருளாதார அடிப்படையிலேயே நிறுவ வேண்டும். ஆனால் மதிப்பெண்ணில் பாகுபாடு கிடையாது. தகுந்த மதிப்பெண் இருந்தால் மட்டுமே மேலே செல்ல அனுமதி, தகுந்த மதிப்பெண் இருந்தும் பண வசதி இல்லாதோருக்கு ஒதுக்கீடு அளியுங்கள், அதை விடுத்துவிட்டு கராறாக இன்ன சாதியினரென்றாலே ஒதுக்கீடு என்பது முறைகேடு, அது நம் சமுதாயத்தில் சாதிப்பாகுபாடுகளை தூண்டுவதாகவே அமையும். இத்தகு கொள்கைகளோடு நம்மால் சாதிப்பாகுபாடுகளை நிறுத்த முடியாது! பட்டப்படிப்பு படித்த இளைஞர்களும் இன்று சாதிக் குழுமம் இது போன்று ஆர்க்குட்டில் ஆரம்பிக்கிறார்கள் என்றால் அது யார் தவறு? சாதி இட ஒதுக்கீட்டை உயர்படிப்பு, பணியிடம் என்று எல்லா இடங்களிலும் பிரித்து வைத்ததுதான்! ஒருவர் வாழ்வு முழுவதும் சாதி அடையாளம் கொடுத்து கொடுத்து இன்னமும் தமிழகத்தை சாதிப் பாகுபாடுள்ள நிலமாக மாற்றி வைத்திருக்கிறோம்.


மக்களும் அரசும் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.


Wednesday, October 28, 2009

நாட்டு நடப்பு


அரசியலையும், அரசாங்கத்தையும் பற்றி நாம் பேசாமலிருந்த காலமேயில்லை. ஒவ்வொரு முறையும் இவையிரண்டும் விமர்சனத்திற்குள்ளாகிக் கொண்டே இருக்கிறது. ஒரு பொதுவான விசயத்தை விமர்சிக்கும் பொழுது அதற்கான எதிர்கருத்துக்கள் இருந்து கொண்டே இருக்கும், ஏனெனில் அரசு, அரசியல் நடவடிக்கைகள் பல முகங்கள் கொண்டவை. மேலும் மக்களின் எண்ணங்களோ ஒரு சமயம் அதற்கு இது பரவாயில்லை, அதனால் இதை அங்கீகரிக்கலாம் என்றும், எதுவுமே சரியில்லை நாம் எதையுமே ஆதரிக்கக் கூடாது என்றும் இருக்கிறது, ஆகையால் வெவ்வேறு கருத்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. நான் எந்த மதம் சார்ந்தோ, சாதி சார்ந்தோ, மாநிலம் சார்ந்தோ இங்கே கட்டுரைகள் எழுதப் போவதில்லை. ஆயினும் ஒரு நேரத்தில் ஒரு மதத்தைப் பற்றிய வரி வரலாம், அது நான் பிறந்த மதமாகவும் இருக்கலாம், மாற்று மதமாகவும் இருக்கலாம், ஆயினும் என் நோக்கம் எந்த மதத்தையும் கேலி செய்வதல்ல.

பல மக்களுக்கு கிடைக்காத கல்வியறிவும், பல விசயங்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிற வாய்ப்பும் அமைந்த நம்மைப் போன்ற சிலர் தாமே முன்வந்து நமது கனவு இந்தியாவிற்கான சாலைகளுக்கான வேலையைத் தொடர வேண்டும். இங்கே இடப்படும் கட்டுரைகளுக்கு எதிராக கற்கள் குவியுமென்பதும் நானறிந்ததே! அந்த கற்கள் அனைத்தும் கனவு இந்தியாவின் கோட்டைகளிலேயே பதிக்கப்படும், அதனால் எண்ணற்ற கற்களை எறியுங்கள்.

நல்லதொரு கல்வி கற்று, நல்லதொரு வேலையில் மகிழ்ச்சியாகவே இருக்கும் ஒருவனுக்கு இது போன்ற வேலை தேவைதானா? இது போன்று பொதுவிடத்தில் கட்டுரையிடுவதால் பலரின் கேள்விகளுக்கும், கேலிகளுக்கும், சுடுசொற்களுக்கும், மிரட்டலுக்கும் ஆளாக நேரிடுமே என்ற அச்சம் எனக்குள் வந்தது உண்மைதான். ஆயினும் வாய்கிழிய வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அருகிலிருக்கும் ஒருவரிடமோ அல்லது இருவரிடமோ இந்தியாவின் நிலை இப்படி இருக்கிறதே இதெல்லாம் எங்கே மாறப்போகிறது என்றும், இதை இப்படிச் செய்தால் மாறுமென்றும் கூறிவருகிறோமே, ஒருபொழுதாவது இந்தக் கருத்துக்களை பொதுமக்களின் கண்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறோமா என்று எண்ணினேன்... பின்னர் ஒருமனதாக இயன்றவரை எனது சிறு எண்ணங்களில் தோன்றி மறையும் கேள்விகளையும் விடைகளையும் உங்களுக்கு வழங்க உறுதியெடுத்துள்ளேன்.

இங்கே இடப்படும் கட்டுரைகள் பெரும்பாலும் தரமான இந்தியாவை உருவாக்குவது எப்படி என்பது பற்றியும், தரமற்ற அரசியல் போக்கை சுட்டிக் காட்டுவதாகவும், பெண்ணுரிமையின் அவசியத்தை வெளிக்காட்டவும், உள்ளூர் பிரச்சினைகள் சிலவற்றை அலசுவதற்காகவுமே இருக்கும். இங்கே இடப்படும் கட்டுரைகள் எந்த ஒரு குறிப்பிட்ட மனிதரையோ, இனத்தையோ இழிவுபடுத்தும் நோக்கத்துடனோ அல்லது எண்ணத்துடனோ எழுதப்படுவது அல்ல.

இங்கே இருக்கும் யாவரும் ஊழலற்ற, உலக தேசங்களிலிருந்து பாதுகாப்பான, அன்றாட வாழ்க்கையின் தரத்தை உயர்த்துவதுமான இந்தியாவைக் காண விருப்பமுள்ளவர்களே, ஆயினும் அந்த இலக்கை நோக்கிய பாதைகள் எண்ணற்றவை, அதற்கு நாம் சொல்லும் அறிவுரைகளும், ஏற்புரைகளும் வித்தியாசமானவை, அதனால் மட்டுமே இக்கட்டுரைகளினால் சிலருக்கு மனக்கசப்பு உண்டாகுமே ஒழிய ஒற்றை இலக்கில் நமக்குள் பூசல் இல்லை.

இக்கட்டுரைகளிலிருந்து நான் முழுதாக மாறுபடுகிறேன், இது ஒரு அர்த்தமற்ற பேத்தல், இந்தக் கட்டுரைகளின் வழி பயணித்தால் நிச்சயம் இலக்கை எட்ட முடியாது என்று எண்ணிணீர்களானால் அதில் நான் மகிழ்ச்சியடைவேன். தாமதிக்காமல் உடனே உங்களுடைய எண்ணங்களை ஒரு கட்டுரையாக்கி அதில் இக்கட்டுரையை தாக்கி மட்டுமே எழுதாமல் இலக்கை நோக்கி விரையும் உங்கள் உயர்வான எண்ணங்களை பதிந்து வெளியிடுங்கள், நம் இணையமெங்கும் இலக்கை நோக்கிய கட்டுரைத் தளங்கள் குவியட்டும், ஒன்றல்லாவிடிலும் மற்றொன்றையாவது மக்கள் சுவைத்து வாசித்து பயன்பெறட்டும். அதனால் வெறுமனே விமர்சனக் கற்களை வீசிவிட்டு மறைந்துவிடாதீர்கள், கூட சில கற்களை வைத்து நீங்கள் ஒரு கோட்டை கட்டுங்கள்!

எழுமின், விழிமின், கருதிய கருமம் கைகூடும் வரை நில்லாது செல்மின்!